deepamnews
இலங்கை

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் அவர்களை துன்பத்திலிருந்து விடுவிக்கும் புதிய அரசியல் முறைமையில் ஒற்றுமையுடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி அனைத்து மக்கள் பிரதிநிதிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மிகுந்த இக்கட்டான பொருளாதார பின்னணியின் மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இவ்வருடம் மருந்துகளுக்காக சுமார் 30 தொடக்கம் 40 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்தின் முறையான விவசாய கொள்கை காரணமாக இம்முறை மேலதிக நெல் அறுவடை கிடைத்துள்ளதாகவும் குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் தலா 10 கிலோகிராம் அரிசி வீதம் 02 மாதங்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சுதந்திர தினத்திற்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்வதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஜனாதிபதி, அது எதிர்காலத்திற்கான முதலீடு என குறிப்பிட்டுள்ளார்.

பொருளியல் மற்றும் வர்த்தக நிறுவனம், பெண்கள் மற்றும் பாலினத்திற்கான நிறுவனம் என்பனவற்றை நாட்டில் முதன்முறையாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும் அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்க அரசாங்க மற்றும் அரச கொள்கைகள் பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு மாவட்டத்திலும் கம்பஹா மாவட்டத்திலும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு 1996 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

14வது தேசிய போர்வீரர் நினைவு தினம் இன்று

videodeepam

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரை சந்தித்தார் எரிக் சொல்ஹெய்ம்

videodeepam

நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை – ரணில்

videodeepam