deepamnews
இலங்கை

அத்தியாவசிய மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உடனடியாக மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும் என கோரி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் பல் வைத்திய அதிகாரிகள் சங்கம் இணைந்து இன்றைய தினம் புதன்கிழமை(18) மதியம் 12 மணி தொடக்கம் 12.30 மணி வரை மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

ஆட்சியாளர்களே! அரச வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்கவும்,வான் உயரத்தில் பணவீக்கம் நடுவீதியில் உத்தியோகத்தர்கள்,திறனற்ற சுகாதார அமைச்சால் இலவச மருத்துவம் வீழ்ச்சி,சுகாதாரத்திற்கான பண ஒதுக்கீட்டில் கை வைக்காதே,சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது, போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மன்னார் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணை செயலாளர் கருத்து தெரிவிக்கும் போது,

இன்று நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதற்கான முக்கிய காரணம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அதிகமான பணவீக்கம் மற்றும் முறையற்ற நிதி மேலாண்மை காரணமாக சுகாதார துறைக்கு ஏற்பட்டிருக்கும் பாரிய சவால்களை அரசாங்கம் விரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே .

குறிப்பாக இந்த மருந்து தட்டுப்பாடு ஒரு வருடத்துக்கு மேலாக நாட்டில் நிலவி வருகிறது. இப்போது அது உச்சகட்டத்தில் உள்ளது. அனேகமான சத்திர சிகிச்சைக்குரிய மருந்துகள், அனஸ்தீசியா ட்ரக்ஸ் அதாவது நினைவு மாற்று சத்திர சிகிச்சைக்குரிய அனேகமான மருந்துகள் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இல்லை .

மன்னார் மாவட்டத்தில் இது பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் மாவட்ட சனத் தொகைக்கு இது ஒரு பெரிய சவாலாக உள்ளது. ஏனென்றால் சிறிய சிகிச்சை மேற்கொள்வதற்கு கூட தேவையான மருந்துகள் இல்லை இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், ஓ. பி. டி நோயாளிகளுக்கான,சிகிச்சைக்கான மருந்துகள் கூட இப்பொழுது இல்லை.

பாரியதொரு சவாலை மக்கள் இதன் மூலம் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் இந்த நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி அறவிடும் முறை மூலம் அரச வேலையில் இருக்கக்கூடிய நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளிடம் இந்த வரி திணிக்கப் பட்டிருக்கிறது.

இதனால் வைத்தியர் ஒருவரின் அல்லது உயர்நிலை அதிகாரியிருவரினதோ 12 மாத சம்பளங்களில் இரண்டு மாத சம்பளத்தை அரசாங்கம் வரியாக பெற்றுக்கொள்கின்றது. இதனால் வைத்தியர்கள் பலர் இந்த நாட்டை விட்டு வெளியேற இது காரணமாக இருக்கிறது.

கடந்த வருடம் மாத்திரம் 600 தொடக்கம் 700 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். இதனால் பெரியளவு வைத்தியர்கள் தட்டுப்பாடு ஏற்படப்போகிறது.

மன்னாரை எடுத்துக்கொண்டால் இங்கு ஸ்கேன் வைத்திய நிபுணர் இல்லை ,கன்சல்டன்கள் பலர் இல்லை ,அதோடு சத்திர சிகிச்சைக்குரிய நிபுணர் ஒருவர் மாத்திரமே இருக்கிறார். மற்றவர் வெளிநாடு சென்றுவிட்டார், இன்னும் படித்தவர்கள், வைத்தியர்கள், நாட்டை விட்டு வெளியேறவும் வாய்ப்பு இருக்கிறது .இப்படி தொடர்ந்தால் இன்னும் ஒரு சில மாதங்களில் மன்னார் வைத்தியசாலையில் பெரிய அளவில் வைத்தியர் பற்றாக்குறை ஏற்படும்.

எனவே அரசாங்கம் இந்த அசாதாரண வரி திருத்தத்தை உடனடியாக மீள பெற வேண்டும் என்பதுடன் மருந்து தட்டுப்பாடு மற்றும் சுகாதார உபகரண தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதே நேரம் தங்களது நியாயமான கோரிக்கை அரசாங்கத்தினால் விரைவில் தீர்க்கப்படவில்லை என்றால் ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து பாரியதொரு தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

Related posts

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டாம் – மனித உரிமைகள் ஆணைக்குழு

videodeepam

வைஷாலியின் கையினை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப நீதிமன்று கட்டளை!

videodeepam

தமிழர்களின் தீர்வு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பு அவசியமானது – தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தல்  

videodeepam