உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய துணை ராணுவப் படையான வாக்னர் குழுவிற்காக போராடும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, சமீபத்திய வாரங்களில் வாக்னர் குழு குறிப்பிடத்தக்க இழப்புகளை சந்தித்ததாகவும், சுமார் 9,000 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
வாக்னர் குழு, ரஷ்ய சிறைகளில் அதிக அளவில் ஆட்சேர்ப்பு செய்துள்ளதாகவும் பெரும்பாலான உயிரிழப்புகள் பயிற்சி பெறாத குற்றவாளிகள் என்றும் கிர்பி கூறினார்.
உயிரிழப்புகள் இருந்தபோதிலும், வாக்னர் குழு பாக்முட் நகரைச் சுற்றி வளைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், ஜேர்மனி தனது முதல் லெப்பர்ட் யுத்த டாங்கிகளை உக்ரைனுக்கு விரைவில் அனுப்ப முடியும் என்று கூறினார்.
ரஷ்யாவின் படையெடுப்பின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்கு சில நாட்களுக்கு முன்னர், வருடாந்திர முனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இந்த உறுதிமொழியினை வழங்கினார்.
பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் இதுவல்ல என தெரிவித்துள்ளார்.