தாய்வான் தொடர்பான விதிகள் அடங்கிய பாதுகாப்பு யோசனை கடந்த சனிக்கிழமை, அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டமையை அடுத்து, கோபம் கொண்ட சீனா,கடந்த 24 மணித்தியாலங்களில் தாய்வானை நோக்கி 71 விமானங்களையும், ஏழு கப்பல்களையும் அனுப்பியுள்ளது.
தாய்வானின் பாதுகாப்பு அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
சீனா தனது சொந்தப் பிரதேசம் என்று கூறிக்கொள்ளும் தாய்வான் மீது சீனாவின் இராணுவத் துன்புறுத்தல் அண்மைய ஆண்டில் தீவிரமடைந்து வருகிறது.
ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இந்த விமானங்களும், கப்பல்களும் தாய்வான் – ஜலசந்தியின் நடுப்பகுதியைக் கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானங்களும் கப்பல்களும் குறித்த பிரதேசத்தில் போர் பயிற்சிகளை நடத்தி வருகின்றன.
இது அதிகாரப்பூர்வமற்ற அமைதி எல்லையாக இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதேசம் என தாய்வானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாய்வானை நோக்கி சீனா அனுப்பிய விமானங்களில் 18 ஜே-16 போர் விமானங்கள், 11 ஜே-1 போர் விமானங்கள், 6 எஸ்யு ரக 30 போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் அடங்கியிருந்தன.
அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் சீனாவின் இராணுவம் பெரும்பாலும் பெரிய இராணுவப் பயிற்சிகளைப் பயன்படுத்துகிறது.
முன்னதாக கடந்த ஆகஸ்டில், அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் பயணத்தின் பின்னரும் சீனா, இதேபோன்ற போர் பயிற்சிகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.