ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நேற்று 7 மணி நிலவரப்படி 74.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், 7 மணி நிலவரப்படி 74.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆண்கள் 82 ஆயிரத்து 021, பெண்கள் 87 ஆயிரத்து 907, மூன்றாம் பாலினத்தவர்கள் 17 பேர் உள்பட மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 945 பேர் வாக்களித்துள்ளனர். இது 74.69 சதவீதமாகும்.
ராஜாஜிபுரம் பள்ளியில் 138வது பூத்தில் மட்டும் டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு போதுமான அளவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு, தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த பூத்தில் கூலி வேலைக்கு செல்பவர்கள் அதிகமாக உள்ளனர். அதனால் அவர்கள் வேலைக்குச் சென்றுவிட்டு வந்துள்ளனர். அங்குள்ள 2 வாக்குச்சாவடிகளிலுமே 1400-க்கும் அதிகமாக வாக்குகள் உள்ளன. இதனைத்தவிர எந்தப் பகுதியிலும் தவறுகள் நடக்கவில்லை. நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.