கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்களை நள்ளிரவில் வீடுதேடி போய் டீ கொடுத்து சமரசம் செய்ய முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைந்ததை ஒட்டி, தேனியில் ஓபிஎஸ் வீட்டிற்கு செல்வதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் ஒரு காலத்தில் அரசியல் களம் திராவிட கட்சிகளில் இருந்து யாராவது பாஜகவை காப்பாற்ற வருவார்களா என்றிருந்தது. இப்போது திராவிட கட்சிகள் வளர பாஜகவினர் தேவைப்படுகின்றனர். பாஜகவின் வளர்ச்சி திராவிட கட்சிகளின் கண்களை உறுத்துகிறது. இதனால் பாஜக தலைவர்களை திராவிட கட்சிகள் விரும்புகிறது.
தேசிய கட்சிகள் தலைவர்கள், தலைவர்கள் போல் இல்லாமல் கம்பெனி மேலாளர்கள் போல் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படி என்னால் இருக்க முடியாது. திராவிட கட்சிகளில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 30 ஆண்டுகளுக்கு மேலாக அசைக்க முடியாத தலைவர்களாக இருப்பார்கள். தமிழ்நாடு, கர்நாடகம், தெலுங்கானாவில் குடும்ப கட்சிகள் உள்ளன.
பாஜகவில் இருந்து சென்றவர்கள் சேர்ந்த இடத்தில் விசுவாசமாக இருக்க வேண்டும். எந்த நிலையிலும் பாஜகவின் வேகம் குறையாது. நான் இருக்கும் வரை கட்சி இப்படித்தான் இருக்கும். கஷ்டமாக இருப்பவர்கள் கிளம்பி போய்விடலாம். என் உடம்பில் ரத்தம் இருக்கும் வரை நான் இப்படித்தான் இருப்பேன். எம்பி, எம்எல்ஏ, முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு நான் அரசியலுக்கு வரவில்லை. தொண்டர்களுக்காக பாஜகவை ஆட்சி கட்டிலில் அமர வைக்கவே வந்துள்ளேன். அதற்காக எவ்வளவு பெரிய சவாலையும் சந்திப்பேன்.
டில்லியில் இருப்பவர்கள் சொன்னாலும் நான் மாறமாட்டேன். இப்படித்தான் பேசுவேன், இப்படித்தான் செயல்படுவேன். அப்படியிருந்தால் தான் தமிழகத்தில் அரசியல் நடத்த முடியும். வரும் நாட்களில் எனது பேச்சில் இன்னும் காரம் இருக்கும். வேறு கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு சொல்வேன், என் முதுகில் இன்னும் இடம் உள்ளது. கத்தியால் குத்திக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.