deepamnews
இந்தியா

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – மத்திய இணை அமைச்சர் முரளிதரன் உறுதி.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது என்று டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரனுடனான சந்திப்புக்கு பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மற்றும் வெளியுறவு துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியது மட்டுமில்லாமல் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின்பேரில், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட மீனவ சங்கத்தைச் சார்ந்த என்.ஜே. போஸ், பி. சேசுராஜா, ஆர். சகாயம் ஆகியோருடன் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரனை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது அவர் முதல்வர் எழுதிய கடிதத்தினை வழங்கினார். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்கள் உள்பட 37 தமிழக மீனவர்களை உடனடியாக இலங்கை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தினார்.

 இதையடுத்து டி.ஆர்.பாலு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தமிழக முதல்வரின் கடிதம் மத்திய அரசுக்கு கிடைத்தது என்றும் அதில் மொத்தம் 64 மீனவர்கள், 10 படகுகளை விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற கைது நடவடிக்கை இருக்க கூடாது என்று தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இலங்கை அரசுடன் ஒன்றிய அரசு உடனடியாக பேச்சு  நடத்தி தமிழக மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பிடிபட்ட படகுகளுடன் அதன் உரிமையாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என இலங்கை அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. அதனை ரத்து செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

தமிழக அரசின் கோரிக்கையை துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய  இணை அமைச்சர் தெரிவித்தார் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

ஜி 20 அமைப்பின் தலைமைத்துவம் இந்தியாவிடம் ஒப்படைப்பு

videodeepam

கர்நாடக முச்சக்கரவண்டியில் மர்மப் பொருள் வெடிப்பு

videodeepam

இந்திய தலைநகரம் முடங்கும் வகையில் நடைபெற்ற உழைக்கும் மக்கள் பேரணி!

videodeepam