ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பிய பின்னர், புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய ஆளுநர்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக, அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, வட மாகாண ஆளுநராக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க நியமிக்கப்பட உள்ளதாக, கடந்த நாட்களில் தகவல்கள் வெளியாகின.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ஆளுநர் பதவிகளைக் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மாகாண சபைகள் கலைக்கப்பட்டதன் பின்னர் அவற்றின் நிர்வாகம் ஆளுநர்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தம்மை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரிவித்ததாக கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தின் பின்னர் ஆளுநர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதால் தம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தின் குறித்த உயரதிகாரி தமக்கு அறிவித்ததாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும், ஏனைய மாகாண ஆளுநர்களுக்கு இதுபோன்ற அறிவித்தல் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.