deepamnews
சர்வதேசம்

பாகிஸ்தானில் பொருட்கள் விலை அதிகரிப்பு – வர்த்தகர்கள் கடை அடைப்பு போராட்டம்!

பாகிஸ்தானில் பொருட்களின் விலை அதிகரிப்பை கண்டித்து வர்த்தகர்கள் கடை அடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அரசை எதிர்த்து பாகிஸ்தான் வணிகர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பாகிஸ்தான் முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஜமாத் – இ – இஸ்லாமி கட்சித்தலைவரும் முன்னாள் செனட்டருமான சிராஜுல் ஹக் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, வணிகர்கள், தொழில் அமைப்புகள், சந்தை கூட்டமைப்புகள், போக்குவரத்துத் துறையினர், வழக்கறிஞர்கள் என பல தரப்பினரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இதனால் பாகிஸ்தானின் வணிக மையமான கராச்சி நகரில் நேற்று முன்தினம்  அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால், வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது பாகிஸ்தானில் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதுடன், மின் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு முற்றிலும் குறைந்துள்ளது. இதனால், தேவையான பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியாத சூழலில் அந்த நாடு உள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சர்வதேச செலாவணி நிதியத்திடமும், நட்பு நாடுகளிடமும் பாகிஸ்தான் உதவி கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்

videodeepam

இந்தோனேஷியாவின் மனித உரிமை மீறல்களுக்காக வருந்துவதாக அந்நாட்டு ஜனாதிபதி தெரிவிப்பு

videodeepam

ருவாண்டாவில் தொடரும் கனமழை – நிலச்சரிவில் சிக்கி 136 பேர் பலி

videodeepam