கிளிநொச்சி மாவட்டத்தில் செய்கை பண்ணப்படவுள்ள 2023/2024ம் ஆண்டிற்கான பெரும்போகத்திற்கான உர விநியோகத்தினை விரைவுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று(08) வெள்ளிக்கிழமை காலை 10.30மணிக்கு இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போகத்தில் 28,415 ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் உரிய காலத்தில் உர விநியோகத்தை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது பெரும்போக பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இரசாயன உரங்கள், கிருமி நாசினிகள் ஆகியவற்றை உரிய காலத்தில் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக உர கம்பனி பிரதிநிதிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் இம் மாவட்ட விவசாயிகள் உரம் மற்றும் கிருமி நாசினிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள நிதி மானியம், பெரும்போக பயிர்ச்செய்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்ட விவசாய பணிப்பாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர், தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர், விவசாய விரிவாக்கல் திணைக்கள அதிகாரி, பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், துறைசார்ந்த அதிகாரிகள், கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், உர கம்பனி பிரதிநிதிகள், விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்