ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியா சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் இந்தியா செல்வது இதுவே முதல்முறையாகும்.
நேற்று இரவு 7 மணி அளவில் புதுடில்லி விமான நிலையத்தை சென்றடைந்த அவரை, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியும் உடன் இருந்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியை வரவேற்கும் விதமாக விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட நடன நிகழ்ச்சியை ஜோ பைடன் பார்த்து ரசித்துள்ளார்.
இதையடுத்து, ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளார். இதன்போது, இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சு நடத்தியுள்ளனர்.

அத்துடன், இந்தியாவில் ஜெட் என்ஜின்களை கூட்டாக தயாரிக்கும் ஒப்பந்தத்தின் முன்னேற்றம், ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்குதல், சிவில் அணுசக்தி பொறுப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இதேவேளை, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்துப் பேச்சு நடத்தினர். இந்த நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்வது, வளர்ச்சி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது போன்ற விடயங்கள் இந்த சந்திப்புகளின் முக்கிய நோக்கமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் இரண்டு நாட்களில் 15 இற்கும் மேற்பட்ட இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.