தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல் முறையாக தனது காரில் அதிமுக கொடி இல்லாமல் பயணித்திருந்தார்.
அதிமுகவின் கட்சி, கொடி, பெயர் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் அவர் கடந்த ஒரு வாரமாக சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கு தீராத முதுகுவலி, இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து அவர் சிங்கப்பூரில் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்ற மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற சென்றிருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு அவர் கோவையில் தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கி சிகிச்சை மேற்கொண்டார். நீராவி குளியல், மண் சிகிச்சை, ஒத்தடம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது அடிக்கடி சென்னைக்கும் தேனிக்குமான பயணம், அரசியல் சந்திப்புகள், இடைவிடாத கார் பயணம் என தினமும் ஓபிஎஸ் பிஸியாகவே இருந்து வந்தததால் அவருக்கு முதுகு வலி அதிகரித்தது. இதனால் நிரந்தர தீர்வு காணவே சிங்கப்பூருக்கு பயணித்தார். சிகிச்சை முடிந்து சென்னைக்கு வந்த அவருக்கு அதிமுக கொடி விவகாரம் பெரும் இடியாகவே இருந்தது. சென்னை விமான நிலையத்திற்கு ஏராளமான தொண்டர்கள் வந்த போதிலும் சற்று வாடிய முகத்துடனே காணப்பட்டார். இதையடுத்து அவர் வழக்கமாக பயன்படுத்தும் கார் வந்தது. அதில் அதிமுக கொடி இல்லாமல் இருந்தது. அந்த காரில் ஏறி அமர்ந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றார்.