deepamnews
இந்தியா

விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் இன்று – தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம்!

மறைந்த பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தின் உடலம் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடலம் நேற்று வைக்கப்பட்டது.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இருந்து திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்தின் உடலுக்கு முதலில் நடிகர் கவுண்டமணி அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழிசை சவுந்தரராஜன், வி.கே. சசிகலா, சென்னை மாநகராட்சி முன்னாள் நகராதிபதி சைதை துரைசாமி, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, நடிகர்கள் மன்சூர் அலிகான், பிரபு, சூரி, ஆனந்த்ராஜ், இயக்குனர்கள் டி.ராஜேந்தர், விக்ரமன், ஏ.ஆர்.முருகதாஸ், பேரரசு, கவிஞர் வைரமுத்து ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்தின் உடலுக்கு  நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

விஜயகாந்த் உடல் வைத்திருக்கும் கண்ணாடி பேழை மீது கை வைத்து கண்ணீர் விட்ட நடிகர் விஜய், பிரேமலதாவின் கரங்களை பிடித்து ஆறுதல் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதற்கிடையில், நடிகர்கள் சூர்யா, செந்தில், விஷால் உள்ளிட்ட பலரும் காணொளி ஒன்றை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை சென்னை தீவுத்திடலில் வைக்கப்படுகிறது என்று தே.மு.தி.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

:தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணியளவில் மறைந்தார் என்ற செய்தி தே.மு.தி.கவுக்கும், திரையுலகுக்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும். மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, சென்னை தீவுத் திடலில் இன்று வெள்ளக்கிழமை காலை 6 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.

தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தீவுத் திடலில் இருந்து மதியம் 1 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தே.மு.தி.க. தலைமை அலுவலகம் வந்தடைந்து, இறுதிச் சடங்கானது 4.45 மணியளவில் தே.மு.தி.க. தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, விஜயகாந்தின் உடல் நேற்று சாலிகிராமம் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு அஞ்சலிக்காக எடுத்து செல்லப்பட்டு, பின்னர்  தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமையகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

Related posts

உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சி – மோடி வலியுறுத்தல்

videodeepam

சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

videodeepam

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு!

videodeepam