இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹிட்லரிலிருந்து வேறுபட்டவர் அல்ல என துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
அங்காராவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே துருக்கி ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
காசா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களும், பலஸ்தீன பொதுமக்களை அப்பட்டமாக கொன்று குவிப்பதும், யூத மக்களை ஹிட்லரின் கொடூரமான கொலைக்கு சமம் என்று எர்டோகன் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதேவேளை, ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களால் காசா பகுதியில் பலஸ்தீன குழந்தைகள் மற்றும் பெண்கள் உயிரிழந்ததை சகித்துக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உட்பட காசா பகுதி மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டவர்கள் அனைவரையும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
அத்துடன், இஸ்ரேலின் போருக்கு மத்தியில் காசாவில் மோதல்கள் குறித்த கருத்துக்களால் துன்புறுத்தலுக்கு உள்ளான கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை வரவேற்க துருக்கி தயாராக உள்ளது எனக் குறிப்பிட்டார்.
போருக்குப் பின்னர் காசாவின் ஆட்சி மற்றும் எதிர்காலம் பலஸ்தீனியர்களால் மட்டுமே தீர்மானிக்கப்படும் என்றும் வேறு யாராலும் தீர்மானிக்க முடியாது எனவும் எர்டோகன் மேலும் எடுத்துரைத்தார்.
இதேவேளை இஸ்ரேல் பலஸ்தீனியர்களுடன் அமைதியான எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்று சிந்திக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.