ரஷ்ய படைகளிடம் இருந்து கெர்சன் பகுதியை உக்ரைன் மீட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டு மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் கீவ் நகர் வரை வெகு வேகமாக முன்னேறிய ரஷ்யப் படைகள் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் உக்ரைன் கொடுத்த பதிலடியால் பின்வாங்கியது. இதனிடையே, போர் மூலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டது.
இந்நிலையில், உக்ரைனின் கெர்சன் பகுதியில் உக்ரைன் படைகள் ஆதிக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து, அங்கிருந்து ரஷ்யப் படைகளை திரும்புமாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கோ உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, கெர்சன் நகரை உக்ரைன் மீட்டுவிட்டதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கெர்சான் பகுதியை உக்ரைன் மீட்டதைத் தொடர்ந்து தெருக்களில் உக்ரைன் கொடி ஏற்றியும், அந்த நாட்டு தேசியப் பாடலை இசைத்தும் மக்கள் தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.