ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி நண்பகலளவில் நடைபெறவுள்ளது.
இருப்பினும், சந்திப்புக்கான இடம் மற்றும் நேரம் ஆகியன இறுதி செய்யப்பட்டிருக்கவில்லை.
அத்துடன், குறித்த பேச்சுவார்த்தையின் போது தேசியப் பேரவைக்கு அழைக்கப்பட்ட அரசியல் தலைவர்களையும் அழைப்பதற்கான அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது.
இனப் பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக பேச்சுக்களை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.
அத்துடன் வரவு – செலவு கூட்டத் தொடருக்கு அடுத்த வாரத்தில் பேச்சுக்களை நடத்த முடியும் என்றும் கோரியிருந்தார்.
இந்நிலையில், குறித்த அழைப்பு தொடர்பில் கடந்த மாதம் 25ஆம் திகதி தமிழ்க் கட்சிகள், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் கலந்துரையாடியிருந்தன.
இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோர் நேற்று முன்தினம் மாலை சுமார் 45 நிமிட நேரம் சந்தித்து நேரடி கலந்தாலோசனைகளை நடத்தினர்.
இதன்போது எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி அழைத்துள்ள கட்சித் தலைவர்களின் சந்திப்பின்போது தேசிய பிரச்சினைக்கான தீர்வினை முன்னெடுக்கும் வழிவகைகள் குறித்து தீவிரமாக ஆராய்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.