பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சேனாரத்ன மற்றும் அவரின் மகன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 10 பேரும் நேற்று கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் இரண்டு பேரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பேராதனை பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் கடந்த 10 ஆம் திகதி முன்னாள் உபவேந்தரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலின் போது சுமார் 300 மாணவர்கள் அங்கு சென்றிருந்ததாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
முன்னாள் உபவேந்தரின் மகன் மீது தாக்குதல் மேற்கொண்ட 12 மாணவர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.