விஷ போதைப்பொருள் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் பாவனையைத் தடுக்க விசேட ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சிறைச்சாலை விவகாரங்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு, நீதித் துறை அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று முன்தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இச்செயலணியின் கீழ் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, விஷ போதைப் பொருட்கள் மற்றும் அபாயகரமான ஒளடதங்களின் பயன்பாட்டைத் தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கும் விடயம் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் அதனைத் தடுப்பதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் போதைப்பொருள் பாவனையைத் தடுப்பது, போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் ஆகியோரை அடையாளம் காண்பது, போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
போதைப் பொருளுக்கு அடிமையாகி தற்போது சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் குறித்தும் அவர்களது எதிர்கால நடவடிக்கைகள், சிகிச்கைகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக முன்னெடுக்கப்படும் தன்னிச்சையான மையங்கள், சமூக புனர்வாழ்வு மையங்கள், நன்னடத்தை சேவை மையங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தவதற்கும் போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பான சட்டத்தை இயற்றுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.