தமிழகத்தில் தமிழ் மொழியை வளர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மதுரை மேல் நீதிமன்ற கிளை தமிழக அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் உள்ள உலக தமிழ்ச்சங்க நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நூல்களை வைக்கவும், நூலகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் உத்தரவிடுமாறு கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனுவை, மதுரையைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்றைய தினம் மதுரை மேல் நீதிமன்ற கிளையின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே தமிழ் மொழியை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மதுரை மேல் நீதிமன்ற தமிழக அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.
அத்துடன், தேவையான நிதியை ஒதுக்கி சங்ககால தமிழ் இலக்கியம் குறித்தும், நவீன கால தமிழ் இலக்கியம் குறித்தும் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.