நாட்டை ஊடறுத்துச் செல்லும் தாழமுக்கம், இன்று மேற்கு கடற்கரையை நோக்கி பயணிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன் காரணமாக கிழக்கு, ஊவா, மத்திய, சபரகமுவ, மேல், தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் 150 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் கூறியுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுவதுடன் நாட்டை ஊடறுத்து 40 – 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பலத்த மழை காரணமாக கண்டி தொடரூந்து நிலையம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் தொடரூந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பிலிமத்தாலாவை மற்றும் பேராதனை தொடரூந்து நிலையங்களுக்கு இடையே மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் கண்டி வரையான தொடருந்து சேவை பிலிமத்தலாவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமையை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன
அத்துடன் மீனவர் சமூகம் மற்றும் கடல் சார் தொழிலாளர்கள் காலி முதல் கொழும்பு, புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற் பிராந்தியங்களிலும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியங்களிலும் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் பயணங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.