deepamnews
இலங்கை

தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதில் தாமதம்

21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும் அரசியலமைப்பு பேரவைக்கு இன்னும் சிவில் செயற்பாட்டாளர்களை நியமிக்க முடியாமல் போயுள்ளது.

இதனால் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் செயற்பாடு தொடர்ந்தும் தாமதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம், சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட பல நியமனங்களை செய்வதற்கு அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரை பெறப்படுவது அவசியமாகும்.

பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிக்க வேண்டும். சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இதற்காக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், எஞ்சியுள்ள நியமனங்கள் தொடர்பில் இணக்கப்பாடற்ற நிலையை அவதானிக்க முடிகின்றது.

ஆளும் கட்சியின் பெரும்பான்மை இணக்கப்பாட்டின் அடிப்படையில் நியமிக்கப்படவுள்ள பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் காரியவசத்தின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. எனினும், இந்த நியமனம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. 

பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இணக்கப்பாட்டுடன் நியமிக்கப்பட வேண்டிய சிவில் செயற்பாட்டாளர்களின் நியமனத்திலும் தொடர்ந்தும் தாமதம் நிலவுகின்றது.

இதற்கான விண்ணப்பம் கோரும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் 112 விண்ணப்பங்கள் இதுவரையில் கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா, பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் நேற்று  பாராளுமன்ற கட்டட தொகுதியில் சந்தித்துக்கொண்டனர். எனினும், இந்த கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றது.

சகல உறுப்பினர்களும் நியமிக்கப்படும் வரை அரசியலமைப்பு பேரவை செயற்படுத்தப்படாது என  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறினார். 

அரசியலமைப்பு பேரவையின் நியமனம் தாமதமானமையால், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Related posts

இறக்குமதி செய்யப்படும் பழங்களில் ஈயம் – பொதுமக்களுக்கு பாதிப்பு

videodeepam

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி இல்லை – பொதுஜன பெரமுன அறிவிப்பு

videodeepam

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய தந்தை கைது..!!

videodeepam