தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்றுவதற்கு தலிபான்கள் விதித்துள்ள தடையை உடனடியாக நீக்குமாறு ஜி7 அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை விதித்ததுடன், தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்றுவதற்கும் தடை விதித்துள்ளனர்.
இந்த உத்தரவுகளுக்கு பல்வேறு தரப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஜி7 நாடுகளளின் அமைச்சர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையொன்றில், தலிபான்களின் பொறுப்பற்ற, ஆபத்தான உத்தரவானது, மனிதாபிமான உதவிகளில் தங்கியுள்ள மில்லியன் கணக்கான ஆப்கானிஸ்தானியர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தை உடனடியாக மாற்றுமாறு நாம் கோருகிறோம் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால் வெளியிட்பட்ட அறிக்கையில் ஜி7 நாடுகளின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளன.
ஜி7 அமைப்பில், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.