deepamnews
சர்வதேசம்

அமெரிக்க காங்கிரஸ் சபாநாயகர் தேர்தலில் குழப்பம் 

அமெரிக்கப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட குடியரசுக் கட்சியின் தலைவர் கெவின் மெக்கார்த்தி, சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் 3 சுற்று வாக்கெடுப்புகளின் பின்னரும் வெற்றியீட்டுவதற்குத் தவறினார்.

மெக்கார்த்தியன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 20 எம்.பிகள் அவருக்கு எதிராக வாக்களித்தமை இதற்குக் காரணம்.

கடந்த வருடம் நடைபெற்ற அமெரிக்க இடைக்கால தேர்தல்களையடுத்து, கீழ்சபையான பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மைப் பலத்தை குடியரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.  குடியரசுக் கட்சிக்கு 222 ஆசனங்களும் ஜனநாயகக் கட்சிக்கு 212 ஆசனங்களும் உள்ளன.

434 ஆசனங்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையில், சபாநாயகராக தெரிவு செய்யப்படுவதற்கு 218 வாக்குகள் தேவை. 222 ஆசனங்களைக் கொண்டுள்ள குடியரசுக் கட்சியினால் இப்பதவிக்கு பிரேரிக்கப்படுபவர் இலகுவாக வெற்றி பெறுவது சாத்தியம்.

இந்நிலையில், புதிய சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது குடியரசுக் கட்சியினால் பிரேரிக்கப்பட்ட வேட்பாளரான கெவின் மெக்கார்திக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த 19 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால் அவருக்கு 203 வாக்குகளே கிடைத்தன.

அதன்பின் இரண்டாவது சுற்று வாக்களிப்பு நடைபெற்றது. இரண்டாவது சுற்றிலும் 19 குடியரசுக் கட்சி எம்பிகள் மெக்கர்த்திக்கு வாக்களிக்கவில்லை.

அதையடுத்து 3 ஆவது சுற்று வாக்களிப்பு நடைபெற்றது. இம்முறை குடியரசுக் கட்சியின் 20 எம்.பிகள், மெக்கார்த்திக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவருக்கு 202 வாக்குகளே கிடைத்தன.

இவ்வாக்களிப்புகளில் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி தலைவர் ஹக்கீம் ஜெப்ரிக்கு 212 வாக்குகள் கிடைத்திருந்தன.

எந்தவொரு வேட்பாளரும் போதிய வாக்குகளைப் பெறாத நிலையில், இத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 100 வருடங்களில் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸின் சபாநாயகர்  முதல் சுற்று வாக்களிப்பில் தெரிவு செய்யப்படாதமை இதுவே முதல் தடவையாகும்.

இறுதியாக 1923 ஆம் ஆண்டு சபாநாயகர் பதவிக்கு  ஒன்றுக்கு மேற்பட்ட வாக்களிப்புகள் நடைபெற்றன.

கெவின் மெக்கார்த்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எம்பிகள் குடியரசுக் கட்சி எம்பிகளில் தீவிர வலதுசாரி குழுவொன்றைச் சேர்ந்தவர்கள் ஆவர். பாராளுமன்ற அவை விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என இக்குழுவினர் வலியுறுத்துகின்றனர்.

Related posts

பங்களாதேஷில் பேருந்து விபத்து – 17 பேர் உயிரிழப்பு!

videodeepam

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு

videodeepam

அமெரிக்காவில் 22 பேர் சுட்டுக்கொலை பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

videodeepam