deepamnews
இலங்கை

ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான  சந்திப்பு உத்தியோகபூர்வமானதல்ல – சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பு, உத்தியோகபூர்வமானதல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையே நேற்று முன்தினம் கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பாக, அடுத்த ஜனவரி மாதம், தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஓரிரு வாரங்களுள் முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்தச் சந்திப்பை பிற்போடுமாறு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு ஏற்கனவே, கடிதம் மூலம் கோரியுள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தினால், தமக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே சந்திப்பிற்கான அழைப்பை விடுத்ததாகவும், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தம்மால், குறித்த தினத்தில் கொழும்பில் இருக்க முடியாது என்ற காரணத்தால், அந்தச் சந்திப்பை பிரிதொரு தினத்திற்கு பிற்போடுமாறும், சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

எது எவ்வாறிருப்பினும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில், அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரமின்றி, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கக்கூடிய அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற விடயத்தையும், சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தால், சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

அதில், குறித்த சந்திப்பானது, உத்தியோகபூர்வமானதல்ல என்றும், ஏனைய கட்சிகளையும் உள்ளடக்கியே பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் மீண்டும் கொவிட் அபாயம்

videodeepam

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட நால்வரின் மரணத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை – சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

videodeepam

இதொகாவுக்கு விடுத்த அழைப்பு தற்பொழுது  சாத்தியப்பட்டுள்ளது – மனோ கணேசன் தெரிவிப்பு

videodeepam