deepamnews
இலங்கை

ஜெனிவா தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரிப்பு

நாட்டின் அரசியலமைப்பிற்கும் உள்ளக நீதிக்கட்டமைப்பிற்கும் முரணான தீர்மானங்களை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்தார்.

ஜெனிவாவில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக பேரவையில் உரையாற்றிய அவர்,

“எமது மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் நாம் கொண்டிருக்கும் நிலையான கடப்பாட்டையும் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்ந்து ஒத்துழைப்புடன் பணியாற்றுவதற்கான எமது தயார்நிலையையும் நான் மீளுறுதிப்படுத்துகின்றேன்.

இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் இணையனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

எமது நாட்டின் அரசியலமைப்பிற்கும் உள்ளக நீதிக்கட்டமைப்பிற்கும் முரணான இத்தகைய தீர்மானங்களை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்காக உறுப்புநாடுகள் மற்றும் கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் வளங்களைப் பயன்படுத்துவது வீண் விரயம் செய்யும் நடவடிக்கையாகும்.

பல்வேறு உள்ளக மற்றும் வெளியகக் காரணிகளால் தோற்றம் பெற்றுள்ள மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு இப்போது இலங்கை முகங்கொடுத்திருக்கின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் ‘பொருளாதாரக்குற்றங்கள்’ தொடர்பில் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நாடொன்றின் பொருளாதாரம் மற்றும் நிதியியல் துறைசார்ந்த விடயங்களை முன்வைப்பது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆணைக்குப் புறம்பானதாகும்.

இந்த தீர்மானம் இலங்கையில் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அங்கீகரிப்பதற்குத் தவறியிருக்கின்றது.

இருப்பினும் நாம் உள்ளக ரீதியில் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

கடந்த காலங்களில் இலங்கை பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கிறது.

அதேபோன்று தற்போதைய சவாலில் இருந்து சர்வதேச சமூகத்தின் உதவியுடன் இலங்கை மீண்டெழும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

அதானி நிறுவன பங்குகள் வீழ்ச்சி- இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாதிப்பில்லை என்கிறார்  அலி சப்ரி

videodeepam

மேலும் 5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

videodeepam

முகமாலையில் இடம்பெற்ற கோர விபத்து

videodeepam