சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலுக்கமையவே அரசாங்கம் வரிகளை விதிப்பதாகவும், இதனால் நடுத்தர வருமானம் கொண்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
“அரசாங்கம் 3 இலட்சம் ரூபாய்க்கு மேலாக இருந்த வருமான வரி வரம்பை, ஒரு இலட்சமாக குறைத்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் வருமானம் என்றால் வரி அறவிடப்படும்.
இவ்வாறான வரிவிதிப்பு நடுத்தர வர்க்க மக்களைத் தான் கூடுதலாக பாதிக்கும். அவர்கள்தான் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்தைப் பெறுபவர்களாக இருப்பர்.
அரச உத்தியோகத்தர்கள் அல்லது தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு தான் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
ஏற்கனவே அவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் செல்கின்ற நிலையில் இருக்கிறார்கள்.
அவர்களின் நிலை மிகவும் மோசமடையப் போகிறது.
நிச்சயமாக வரிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
மேல் மட்டங்களில் இருப்பவர்கள், இன்றும் வரி கட்டாது ஏய்த்துக் கொண்டிருப்பவர்கள் போன்றவர்களிடம் இருந்தே வரியை பெற்றுக் கொள்ள வேண்டும்.
சாதாரண நடுத்தர வர்க்கத்தில் உள்ள மக்கள் மீதோ, அல்லது பெறுமதி சேர் வரி உள்ளிட்ட மறைமுக வரிகளை உயர்த்துவதன் மூலமோ, பாதிக்கப்பட்ட மக்கள்தான் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாகப் போகின்றார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.