deepamnews
இந்தியா

குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்துவிழுந்து  விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை  140 ஆக உயர்வு

இந்தியாவின் குஜராத் மாவட்டம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் உடைந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.

குறித்த பாலத்தில் நேற்று மாலை ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் நின்றிருந்த நிலையில் திடீரென பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.

உடனடியாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு முதல் கட்டமாக 60 உடலங்கள் மீட்கப்பட்டன.

இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த பணியில் தேசிய அனர்த்த மீட்பு குழு, ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை வீரர்களும் களம் இறக்கப்பட்டனர். இரவு முழுவதும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆற்று நீரை வெளியேற்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. விபத்து நடைபெற்ற பகுதியில் ஆய்வு செய்த மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகாலைவரை நூறை தாண்டி விட்டதாக குஜராத் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர், 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே மீட்புப் பணிகளை ஆய்வு செய்த குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிக்காக சம்பவ இடத்திற்கே ராணுவ வைத்தியர்கள் குழு மற்றும் மருத்துவ ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த பாலத்தை நிர்வகித்து வந்த தனியார் நிர்வாக குழுவுக்கு எதிராக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேரின் விடுதலை கோரிய வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

videodeepam

ஆளுநருக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டத்தை பாமக நடத்தும் – அன்புமணி ராமதாஸ் தெரிவிப்பு

videodeepam

தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது: இதுதான் திமுக அரசின் சாதனை என்கிறார் சி.வி. சண்முகம்

videodeepam