பெருந்தோட்டத்துறையை “நலிவுற்ற” பிரிவாக அறிவிக்க வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
உலக வங்கியின் அறிக்கைக்கு அமைவாக இலங்கையின் தேசிய வறுமை மட்டம் 26 வீதமாக உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்டத்துறையின் வறுமை நிலையானது 53 வீதமாக உயர்வடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், ஐ.நா உலக உணவு திட்டத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையில் “உணவின்மை” நகர பகுதிகளில் 43 வீதமாகவும் கிராமிய பகுதிகளில் 34 வீதமாகவும் பெருந்தோட்ட பகுதிகளில் 51 வீதமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பெருந்தோட்டத்துறை மக்கள் வாழும் குடியிருப்புகளை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சித் திட்டங்களை அமுல்படுத்துமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், உணவின்மை பிரச்சினையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி மலையக பெருந்தோட்ட மக்களுக்கு விசேட உதவிகளை வழங்கிட இந்திய மத்திய அரசும் தமிழக மாநில அரசும் முன்வர வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.