deepamnews
இலங்கை

அடுத்த வருட இறுதியில் பணவீக்கம் 5 சதவீதமாக குறையும் – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு

தற்போதைய நிதிக் கொள்கைகளுக்கு அமைய அடுத்த வருட இறுதியாகும் போது பணவீக்கத்தை 4 தொடக்கம் 5 சதவீதம் அளவில் பேணமுடியும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரின் தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடிய நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மத்திய வங்கி ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களின் மிதக்கும் வட்டி வீதத்தின்கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களுக்கு அறவிடப்படும் வட்டி வீதத்தை அதிகரித்ததனால் அசௌகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் வங்கிகளுடன் கலந்துரையாடி நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

இவ்வாறு வட்டி வீதம் அதிகரித்துள்ளதால் ஒரு சில கடன் பெறுநர்களின் முழு சம்பளத்தையும் கடன் தவணைகளுக்கு செலுத்தவேண்டி ஏற்பட்டுள்ளதாக இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வாடிக்கையாளர்கள் வங்கிகளுடன் கலந்துரையாடி குறிப்பிட்ட சலுகைக் காலத்துக்கு உரிய வட்டியை மாத்திரம் செலுத்த முடியும் என்றும், அது தொடர்பில் வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, 2 மாதங்களுக்கு முன்னர் 70 சதவீதமாகக் காணப்பட்ட சாதாரண பணவீக்கம் தற்பொழுது 66 சதவீதமாக குறைந்துள்ளதுடன், 95 சதவீதமாக காணப்பட்ட உணவுப் பணவீக்கம் 85 சதவீதமாக குறைந்துள்ளது.

அதற்கமைய, தற்போதுள்ள நிதிக் கொள்கைகளுக்கு அமைய இந்த மதிப்பீடுகளை அடுத்த ஆண்டு இறுதியாகும் போது 4 முதல் 5 சதவீதம் அளவில் பேணமுடியும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமொன்றாக மாற்றுவதற்கு புதிய சட்டமொன்றை தற்பொழுது வரைந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related posts

வெடுக்குநாறி மலையில் சிலை வைக்க மீண்டும் தடை

videodeepam

இலங்கை முதலுதவி சங்க தொண்டர்கள் இன்று மதிப்பளிப்பு!

videodeepam

காங்கேசன்துறை துறைமுகத்தில் உள்கட்டமைப்பை விரைவாக நிறுவும் திட்டம் நடைமுறை

videodeepam