deepamnews
இலங்கை

தேர்தலுக்கு நிதியில்லை என்பது  ஜனாதிபதியின் அரசியல் சூழ்ச்சி –  அநுர குமார திஸாநாயக்க குற்றச்சாட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் 10 பில்லியன் ரூபா இல்லை என்றால் 2023 ஆம் ஆண்டு அரச செலவுக்காக அரசாங்கம் 7900 பில்லியன் ரூபா நிதியை எவ்வாறு திரட்டிக் கொள்ளும்.

தேர்தலுக்கு நிதியில்லை என்பதை ஜனாதிபதியின் பிறிதொரு அரசியல் சூழ்ச்சி என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பன்னல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களையும்,மத்திய வங்கி பிணைமுறி மோசடியாளர்களையும் சிறைக்கு அனுப்புவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அனைத்து குற்றங்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைத்து அவர் நாட்டை விட்டு சென்றார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ விவசாயத்துறையை முழுமையாக சீரழித்து முழு நாட்டு மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்கி விட்டு அவர் தற்போது வெளிநாட்டுக்கு விடுமுறை கால உல்லாச சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காகவே பொதுஜன பெரமுனவினர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று 05 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் எந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளார் என்பதை நாட்டு மக்கள் ஆராய வேண்டும்.

எரிபொருள்,எரிவாயு தற்போது தடையில்லாமல் கிடைக்கப் பெறுகிறது என அரசாங்கத்திற்கு சார்பானவர்கள் குறிப்பிடுவது தவறு.

அரசமுறை கடன்களை மீள் செலுத்த முடியாது,நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது எனகடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து அரச முறை கடன் செலுத்தும் நிதி மிகுதியானது.

அந்த நிதியில் தான் எரிபொருள் மற்றும் எரிவாயு தற்போது இறக்குமதி செய்யப்படுகிறது,ஆகவே பொருளாதார நெருக்கடிக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,பாராளுமன்றத்திற்கும் மக்களாணை கிடையாது.நாட்டு மக்கள் அரசியல் மறுசீரமைப்பை எதிர்பார்க்கிறார்கள். எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தீர்மானமிக்கது.உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் பாரிய முயற்சிகளையும்,சூழ்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Related posts

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு தினம் எதிர்வரும் வாரத்தில் அறிவிப்பு

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மேலும் தாமதம் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam

போலி பத்திரம் – 136 மில்லியன் மோசடி!

videodeepam