deepamnews
இலங்கை

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் கைது! – டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல்

வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று முன்னிலையான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள் நிமித்தம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இரண்டாவது நாளாக நேற்று அவர் முன்னிலையான சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

பல மாதங்களாக வெளிநாட்டில் தங்கியிருந்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, கடந்த புதன் கிழமை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் அந்தத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். அங்கு அவர் சுமார் 8 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

அவர் நேற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இரண்டாவது நாளாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையானதையடுத்துக் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவரைக் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்போது அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பில் கடந்த மே மாதம் இடம்பெற்ற போதனையின்போது, ஏனைய மதங்கள் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டார் என்று போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதன்பின்னர் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்வதேச நாணய நிதியத்தின்  உதவியுடனோ, இல்லாமலோ நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும் – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

videodeepam

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து   – புருனோ திவாகர கைது!

videodeepam

இலங்கை கோரும் கடன் உத்தரவாதத்திற்கு பாரிஸ் கழகத்திடமிருந்து சாதகமான பதில்.

videodeepam