deepamnews
இந்தியா

எம்.ஜி.ஆரை பின்பற்றியவர்களுக்கு திராவிடக் கொள்கைகளைக் காக்கும் கடமை இருக்கிறது – தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பு

“எம்.ஜி.ஆர். பின்பற்றிய அண்ணாயிசத்தில் உண்மையான பற்று கொண்டவர்கள் அனைவருக்கும் திராவிடக் கொள்கைகளைக் காக்கும் கடமை இருக்கிறது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். அத்துடன், எம்.ஜி.ஆர் உடனான பல்வேறு நினைவலைகளையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டுத் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,.

“தமிழ்நாட்டினுடைய முதல் பெண் முதல்வர் என்ற சிறப்புக்குரியர் யார் என்று கேட்டீர்களானால், அம்மையார் ஜானகி எம்.ஜி.ஆர்தான். அவருடைய நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். இது சிலருக்கு வியப்பாக இருக்கும், அதிர்ச்சியாக இருக்கும், ஆச்சரியமாக இருக்கும். ஆனால், வரலாற்று உண்மையை மனச்சாட்சிப்படி சிந்திக்கும் யாருக்கும் இது அதிர்ச்சியாக இருக்காது.

இதனுடைய அடிப்படை லட்சியங்களின் மீது எம்.ஜி.ஆரும், ஜானகியும் பற்று கொண்டு செயல்பட்டு வந்தார்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தனி இயக்கம் கண்டாலும், தனது கொள்கையில், அண்ணாயிசத்தை அவர்கள் கட்டிக்காத்தார்கள். அண்ணாயிசம் என்று சொன்னால், ‘சாதியற்ற, சமதர்ம, பகுத்தறிவு சமுதாயத்தை ஜனநாயக வழியில் நிறைவேற்ற உழைப்பதுதான் அண்ணாயிசம்’ என்று அவரே வரையறுத்து சொல்லியிருக்கிறார். இத்தகைய அண்ணாயிசத்தில் உண்மையான பற்று கொண்டவர்கள் அனைவருக்கும் திராவிடக் கொள்கைகளைக் காக்கும் கடமை இருக்கிறது. அதனை நினைவூட்டக்கூடிய வகையில்தான் இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திராவிட இயக்கக் கொள்கைகளைக் காப்பதும், அதன் மூலமாகத் தமிழ்நாட்டை மேன்மையடையச் செய்வதும்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும், ஜானகி அம்மையாருக்கும் நாம் செய்யக்கூடிய மரியாதையாக இருக்கும், அதுதான் நம்முடைய நன்றிக்கடனாக இருக்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Related posts

நீட் பயிற்சி மாணவர்கள் இருவர் தற்கொலை – இந்த ஆண்டில் மாத்திரம் 24 பேர் உயிரிழப்பு.

videodeepam

புதிய வகை கொரோனாவால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது – விஞ்ஞானி தகவல்

videodeepam

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – மத்திய இணை அமைச்சர் முரளிதரன் உறுதி.

videodeepam