வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அண்மைக் காலங்களில் கால்நடைகள் உயிரிழந்தமைக்கு, திடீர் குளிர் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியே, காரணமாகும் என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பாதுகாப்பு திணைக்களத்தின் ஆய்வில் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான வானிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பசுக்கள், எருதுகள், ஆடுகள் மற்றும் கோழிகள் உள்ளிட்ட சுமார் 1,660 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மேலும் பல கால்நடைகள் சுகயீனமடைந்துள்ளன.
கால்நடைகளின் இந்த திடீர் மரணங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு, விவசாய, வனவிலங்கு மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதன்படி, விசாரணைகளை முன்னெடுத்த பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், கால்நடை மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை விவசாய அமைச்சரிடம் கையளித்துள்ளது.
கால்நடைகளின், இறப்புக்கு தொற்றுநோய் காரணம் அல்ல என்றும், கடுமையான குளிரால் ஏற்பட்ட அதிர்ச்சியே காரணமாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.