கொவிட் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் தொடர்பான உத்தியோகப்பூர்வ தீர்மானம் ஓரிரு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் எனவும் பொருளாதாரத்தை அவதானத்தில் கொண்டு அனைத்து தீர்மானங்களும் எடுக்கப்பட வேண்டும். பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தகளை முழுமையான கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
சுகாதாரத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மருந்து கொள்வனவு செய்வது தொடர்பிலும், சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் நான் இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகப்பூர்வ விஜயம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய மருந்து உற்பத்தி தொடர்பில் சமூக மட்டத்தில் குறிப்பிட்டப்பட்ட விடயங்களின் உண்மை தன்மையை தெரிந்துக் கொள்வதற்காகவே எனது தனிப்பட்ட செலவில் தான் இந்தியாவிற்கு சென்றேன். இந்திய மருந்து உற்பத்தி நிறுவனம் எனது செலவுகளுக்கு பொறுப்பேற்கவில்லை.
மருந்து கொள்வனவு திட்டமிட்ட வகையில் தாமதப்படுத்தப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு முறையற்றது. அத்தியாவசிய உணவு பொருட்களை உடனடியாக கொள்வனவு செய்வதை போன்று மருந்து பொருட்களை விரைவாக கொள்வனவு செய்ய முடியாது.
விலை மனுக்கள் மற்றும் கட்டணத்தின் முற்பணத்தை செலுத்திய பின்னரே உரிய நிறுவனம் மருந்து உற்பத்தியை ஆரம்பிக்கும்.
உயிர்காக்கும் 14 வகையான மருந்து பொருட்கள் தேவையான அளவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று ஒருபோதும் குறிப்பிடவில்லை.
வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையினால் மருந்து கொள்வனவில் சிரமம் காணப்படுகிறது. ஆனால் மருந்து தட்டுப்பாடு நாட்டில் பாரதூரமாக இல்லை.
பூகோள மட்டத்தில் கொவிட் பெருந்தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் கொவிட் வைரஸ் தொற்று பரவல் சடுதியாக அதிகரித்துள்ளது. இலங்கையில் கொவிட் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் தளர்த்தப்பட்டுள்ளன.
கொவிட் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
நாட்டின் பொருளாதார நிலைமையை அவதானத்தில் கொண்டு அனைத்து தீர்மானங்களையும் எடுக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
முகக்கவசம் அணிதலை நாட்டு மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மொத்த சனத்தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் மூன்றாவது தடுப்பூசி இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை. நாட்டு மக்களும் தமது சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.