பிரான்ஸில் உண்டாகும் தேவையற்ற கர்ப்பங்களைத் தடுக்கவும், பாலியல் சம்பந்தமான நோய்களைத் தவிர்க்கவும் 18 முதல் 25 வயதுள்ளவர்களுக்கு இலவச ஆணுறைகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் (Emmanuel Macron) அறிவித்துள்ளார்.
பிரான்ஸில் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பாலியல் நோய்களின் எண்ணிக்கை 30 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து இம்மானுவேல் மெக்ரான் கூறுகையில், “தேவையற்ற கர்ப்பங்களைத் தவிர்க்கவும், பாலியல் நோய்களைக் குறைக்கவும் 18 முதல் 25 வயதுள்ளவர்களுக்கு மருந்தகங்களில் ஜனவரி 1 முதல் ஆணுறைகள் இலவசமாகக் கிடைக்கும்.
மேலும் இது கருத்தடைக்கு எதிரான சிறிய புரட்சி. ஆணுறைகள் இலவசமாகக் கிடைக்கும் என்ற இந்தத் திட்டம், 25 வயதுக்குக் கீழுள்ள பெண்கள் பிறப்பு கட்டுப்பாட்டைத் தீர்மானிக்கும் வகையில் இருக்கும். இந்த விடயம் குறித்து ஆசிரியர்களுக்குச் சிறந்த கல்வியை அளிக்க வேண்டி உள்ளது” என்று பாலியல் கல்வி குறித்துத் தெரிவித்துள்ளார்.